Thursday, October 25, 2007

மைசூர்பாகு

மைசூர்பாகு செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 கப்

செய்முறை:

முதலில் கடலை மாவை கட்டியில்லாமல் இருப்பதற்காக நன்கு சலித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
வட்டமான அல்லது சதுரமான தட்டு, அல்லது ட்ரேயில் நெய் தடவி வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு, சர்க்கரையை போட்டு கொதிக்க விடவும். ஒற்றை கம்பிப்பதம் வர ஆரம்பித்த உடனேயே, ஒரு கையால் கிளறிக் கொண்டே, மற்றொரு கையால் கடலைமாவை கொஞ்ச கொஞ்சமாகப் போடவும். இல்லையென்றால், கடலைமாவு கட்டி தட்டிவிடும்.

அடுப்பிலிருக்கும் மைசூர்பாகு



கடலை மாவு சர்க்கரைப்பாகில் நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், நெய்யை சிறிது சிறிதாக விட்டு, ஒரு கையால் விடாமல் கிளறிக்கொண்டே வரவும்.

சிறிது நேரத்தில், பாகு அடியிலிருந்து நுரைத்துக் கொண்டு வரும்.
(முதன் முறையாக செய்து பார்ப்பவர்களுக்கு: பிரெட்டில் இருப்பது போல், பாது புள்ளி புள்ளியாக பூத்துக் கொண்டு வரும். அது தான் சரியான பதம்.) இப்போது, மேலும் ஒருமுறை கிளறி, ஏற்கனவே, நெய் தடவி வைத்த தட்டில் கொட்டவும்.

மைசூர்பாகு



நன்கு ஆறியவுடன், நெய் தடவிய கத்தியால் சதுரமாகவோ, டைமண்ட் வடிவிலோ துண்டுகள் போடவும்.

இம்முறையில் செய்யப்படும் மைசூர்பாகு மிகவும் மென்மையானதாக இருக்கும்.


சில குறிப்புகள்:



  • கடலை மாவு புதியதாக இருக்க வேண்டும்.

  • உருகிய நெய் மட்டுமே விடவேண்டும். உறைந்து இருந்தால், நெய் பாட்டில் அல்லது நெய் டப்பாவை சிறிது நேரம் வெந்நீரில் வைத்தாலே உருகி விடும்.

  • கடலை மாவை சலிக்காமல் அப்படியே போட்டால் அதிலிருக்கும் கட்டிகள் கரையாது.

  • அதிக அளவு நெய் வேண்டாம் என்பவர்கள், மைசூர்பாகு சாப்பிடுவதற்கு சிறிது கடினமானதாக இருந்தால் பரவாயில்லை என்பவர்கள், கடலை மாவு : சர்க்கரை : நெய் இவைகளை 1 : 1 : 1 என்ற விகிதத்தில் செய்யலாம்.

  • மைசூர்பாகை தட்டில் கொட்டிய பிறகு அழுத்தக்கூடாது. வேண்டுமானால் அடியில் நெய் தடவிய தட்டையான கரண்டி, அல்லது தட்டால் லேசாக சமப்படுத்தலாம்.

No comments: